மதுரை தனியார் காப்பகத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்ட இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன. காப்பகத்துக்கு சீல்வைக்கப்பட்ட நிலையில் தலைமறைவான காப்பக நிர்வாகியைப் போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இயங்கி வந்த இதயம் அறக்கட்டளை காப்பகத்தில் தங்கி இருந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணின், ஒரு வயது ஆண் குழந்தை கொரோனாவால் உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் , போலியான ஆவணங்களை பயன்படுத்தி நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டது.
காப்பக நிர்வாகிகளான கனிமொழி, கலைவாணி ஆகிய இருவரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மதுரை இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரிடம் கடந்த ஜூன் 13 ஆம் தேதி குழந்தை மாணிக்கம் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது தெரியவந்தது.
குழந்தை மாணிக்கத்தை பத்திரமாக மீட்ட பின், காப்பகத்தில் இருந்த அனைவரையும் வேறு காப்பகங்களுக்கு மாற்றும் போது , கர்நாடக மாநிலத்தை சேர்த்த ஸ்ரீதேவி என்ற பெண்ணின் 2 வயது பெண் குழந்தை தனம்மா காணாமல் போனதும் தெரிய வந்தது.
கல்மேடு பகுதியை சேர்ந்த சில்வர் பட்டறை தொழிலாளரிடம் விற்கப்பட்ட அந்தக் குழந்தையும் பத்திரமாக மீட்கப்பட்டது. குழந்தைகளை விலைக்கு வாங்கிய நபர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதயம் அறக்கட்டளைக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் , தலைமறைவாக உள்ள அறக்கட்டளை நிர்வாகி சிவக்குமார் உள்ளிட்டோரை தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஒரே மாதத்தில் இரண்டு குழந்தைகளை காப்பக நிர்வாகிகள் விற்ற நிலையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் இந்த காப்பகத்தில் இது வரை எத்தனை குழந்தைகள் முறைகேடாக விற்கப்பட்டிருக்கலாம் என விசாரணை தீவிரமடைந்துள்ளது. காப்பகத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கணினியின் ஹார்ட் டிஸ்க் சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிவக்குமாரின் தனிப்பட்ட வங்கி கணக்குகள், அறக்கட்டளையின் கீழ் உள்ள வங்கி கணக்குகளை முடக்கியும் பணப் பரிவர்த்தனைகள் குறித்து காவல்துறையினர் மேல் விசாரணை நடத்த உள்ளனர்.
இதனிடையே, குழந்தைகள் விற்பனை வழக்கில் தேடப்படும் இதயம் அறக்கட்டளை உரிமையாளர் சிவக்குமாரும், நிர்வாகி மதார்ஷாவும் சென்னையில் பதுங்கியுள்ளதை, செல்போன் சிக்னல் மூலம் போலீசார் கண்டறிந்துள்ளனர். இருவரும் இன்றே கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.