சி.எஸ்.ஐ திருச்சபை தேர்தலில் தொழில் அதிபர் எஸ்.டி.கே ராஜன் தூண்டுதலின் பேரில் பலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறுமியை கீழே போட்டு போலீசாரை தாண்டச்சொல்லி நடத்தப்பட்ட வாக்காளர் போராட்டம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு
சி.எஸ்.ஐ திருச்சபையின் தூத்துக்குடி - நாசரேத் மண்டல லே செயலாளராக பொறுப்பு வகித்து வருபவர் தொழில் அதிபர் எஸ்.டி.கே ராஜன். இந்த திருச்சபைக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், தேவாலயங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை நிர்வகிக்கும் பலம் வாய்ந்த பொறுப்பு என்பதால் இவர் வகித்துவரும் லே செயலாளர் பொறுப்புக்கு கடும் போட்டி இருக்கும்.
இந்த பதவிக்கு வருகிற ஆகஸ்ட் மாதம் மீண்டும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை திருச்சபை தேர்தல் குழுவினர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தங்கம்மாள்புரம், பண்டாரவிளை உள்ளிட்ட பல ஊர்களில் ஏராளமானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
பண்டாரவிளையில் ரோமன் கத்தோலிக்க பெண்ணை திருமணம் செய்த காரணத்துக்காக ஒரு இளைஞர் மற்றும் குடும்பத்தாரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. சென்னையில் தொழில் செய்வோர் யாராக இருந்தாலும் குறைந்தபட்சம் 120 நாட்களாவது உள்ளூரில் இருந்தால் தான் அவர்களுக்கு வாக்களிக்க உரிமை உண்டு என்று புதிய விதியை வகுத்து நூற்றுக்கணக்கானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து எஸ்.டி.கே ராஜன் தூண்டுதலின் பேரில் நீக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினர்.
இந்த நிலையில் கடந்த முறை தங்கம்மாள் புரத்தில் நீக்கப்பட்டவர்களின் பெயர்கள் சேர்க்கப்படும் என்று வாக்குறுதி அளித்துச்சென்றவர்கள் மீண்டு ஒட்டிய பட்டியலில் பெயர் இல்லாததால் தம்பதியர் தேர்தல் குழுவினரை ஆலயத்துக்குள் வைத்து பூட்டி நியாயம் கேட்டனர்
வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறும் என்று தங்களுக்கு ஏற்கவே உறுதி தரவில்லை என்பது உண்மையானால், தனது குழந்தையை தாண்டிச்செல்லும் படி காவல்துறையினரின் காலரியில் சிறுமி ஒருவரை படுக்கவைத்து தாண்ட கூற, அந்தச்சிறுமியோ அழுதபடியே படுத்திருந்தாள்
இதையடுத்து தங்களுக்கு வாக்களிக்க உரிமை வேண்டும் எனக்கேட்டு அந்த தம்பதியரும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட அந்த ஊர் மக்கள் சிலரும் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்
காவல்துறையினர் வந்து சமாதனப்படுத்தியும் அடங்க மறுத்து தங்கள் கோரிக்கையில் அவர்கள் உறுதியாக இருந்தனர். வாக்காளர்களின் குற்றச்சாட்டு குறித்து லே செயலாளரான தொழில் அதிபர் எஸ்.டி.கே ராஜனிடம் கேட்ட போது, தங்கள் திருமண்டலத்துக்கு என்று சில விதிகள் இருப்பதாக கூறிய அவர் வேறு மத பெண்ணை காதலித்து மணந்தாலும், அந்த பெண் தங்கள் மதத்திற்கு மாற்றினால் மட்டுமே அந்த இளைஞருக்கு வாக்குரிமை உண்டு என்றும் தேவாலயம் உள்ள ஊரை விட்டு வெளியூரில் வசிப்பவர்களாக இருந்தால் குறைந்தபட்சம் 120 நாட்களாவது ஊரில் இருக்க வேண்டும், அப்படி இருக்கா விட்டால் வாக்கு கிடையாது என்று விதி உள்ளதால் தனக்கு வேண்டப்பட்டவர்கள், வேண்டப்படாதவர்கள் என பலரது வாக்கு வெட்டப்பட்டுள்ளது என்று கூறிய ராஜன், சொந்த ஊரில் வசிக்காத காரணத்தால், தனது ஆதரவாளராக கருதப்படும் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வாக்கும் வெட்டப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.
சட்டசபை தேர்தலுக்கு நடிகர் நடிகைகளை வைத்து கூவி அழைத்தாலும் வாக்களிக்க வர மறுக்கும் ஜனங்களின் மத்தியில் , தங்கள் மதம் சார்ந்த சபையில் உரிமையை நிலை நாட்ட கைவசம் இருக்கும் ஒரே ஆயுதம் தங்கள் வாக்கு என்பதை உணர்ந்து போராட்டம் நடத்தி வருவது நிச்சயம் வியப்புக்குரியது தான்..! அதே நேரத்தில் எந்த வித அசம்பாவிதமும் ஏற்படாமல் நியாயமாக தேர்தல் நடத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதும் அவசியம்..!