மதுரையில் தனியார் காப்பகத்தில் இருந்து விற்கப்பட்ட 2 குழந்தைகளை போலீசார் மீட்டுள்ளனர். பல லட்சம் ரூபாய்க்கு குழந்தைகளை விற்பனை செய்த பின், இறந்து விட்டதாக காப்பக நிர்வாகிகள் நடத்திய நாடகம் அம்பலமானது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
மதுரை ரிசர்வ் லைன் காவலர் குடியிருப்பு பகுதியில் இயங்கிவரும் “இதயம் முதியோர், ஆதரவற்றோர் இல்லத்தினை” இதயம் அறக்கட்டளையின் நிறுவனரான சிவகுமார் என்பவர் நடத்தி வந்தார். சாலையோரத்தில் ஆதரவின்றி சுற்றித் திரியும் நூற்றுக்கணக்கானோரை மீட்டு இங்கு பராமரித்து வருவதாக கூறப்பட்டு வந்தது. மதுரை சேக்கிப்பட்டியைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணின் கணவர் உயிரிழந்த நிலையில், அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு 3 குழந்தைகளுடன் தவித்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த அசாருதீன் என்பவர் ஐஸ்வர்யாவை மீட்டு, 4 மாதங்களுக்கு முன் இந்த இதயம் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி ஐஸ்வர்யாவின் ஒரு வயது குழந்தையான மாணிக்கத்துக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, நரிமேடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாக காப்பகத்தைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர். ஒரு வாரம், இரண்டு வாரம் என கழிந்த நிலையில் குழந்தை மீண்டும் காப்பகத்துக்கு வந்து சேரவில்லை. குழந்தை குறித்து கேட்ட ஐஸ்வர்யாவிடம், கொரோனா பாதித்து குழந்தை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். 16 நாட்கள் கடந்த நிலையில், திடீரென கடந்த 29ஆம் தேதி ஐஸ்வர்யாவிடம் குழந்தை மாணிக்கம் கொரோனாவால் உயிரிழந்துவிட்டதாகவும் தத்தனேரி மயானத்தில் புதைத்துவிட்டதாகவும் கூறியுள்ளனர். ஐஸ்வர்யாவையும் அங்கு அழைத்துச் சென்று இறுதிச் சடங்குகளை செய்ய வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டு வந்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்த தகவல், ஐஸ்வர்யாவை காப்பகத்தில் சேர்த்துவிட்ட அசாருதீனுக்குச் சென்றுள்ளது. கொரோனாவால் குழந்தை இறந்ததாகக் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், நரிமேடு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மதுரை ராஜாஜி மருத்துவமனையிலும் விசாரித்துள்ளார். அவர்கள் அப்படி ஒரு குழந்தை சிகிச்சைக்கு வரவே இல்லை எனக் கூறியதும், காப்பகத்தினரிடம் உரிய ஆவணங்களை கேட்டுள்ளார். அவர்கள் வழங்கிய ஆவணங்கள் அனைத்தும் போலி என்பது தெரியவந்தது. இதனையடுத்து அசாருதீன் போலீசில் புகாரளித்தோடு, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கும் கொண்டு சென்றார். உடனடியாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், வட்டாட்சியர், போலீசார் என விசாரணை தீவிரமடைந்தது.
முதற்கட்ட விசாரணையில் இதயம் அறக்கட்டளையும் ஆதரவற்றோர் இல்லமும் உரிய அனுமதியின்றி இயங்கி வந்தது தெரியவந்தது. அங்குள்ள பதிவேட்டை ஆய்வு செய்தபோது, காப்பகத்தில் சேர்க்கப்பட்ட பலர் மர்மமான முறையில் இறந்திருப்பதும் தெரியவந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, தத்தனேரி மயானத்தில் புதைக்கப்பட்டது குழந்தை மாணிக்கமே இல்லை என்பதும், 2 நாட்களுக்கு முன் இறந்துபோன வேறொரு குழந்தையின் சடலம் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சிவக்குமாரின் உதவியாளரான கலைவாணி என்ற பெண் மற்றும் தன்னார்வலராக இருந்த ஒருவனை விசாரணை வளையத்திற்குள் போலீசார் கொண்டு வந்தனர். அவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாணையில் மதுரை இஸ்மாயில்புரம் நகைக்கடை உரிமையாளர் ஒருவருக்கு, 5 லட்சம் ரூபாய்க்கு குழந்தை மாணிக்கத்தை விற்பனை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சென்ற போலீசார் குழந்தையை பத்திரமாக மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் இதயம் அறக்கட்டளை முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த கர்நாடகாவை சேர்ந்த ஸ்ரீதேவி என்ற ஆதரவற்ற பெண்ணும், தனது 2வயது பெண் குழந்தை 10 நாட்களுக்கு முன் இறந்து விட்டதாக காப்பக நிர்வாகிகள் தெரிவித்தால், குழந்தையை விற்பனை செய்திருக்கலாம் என்று புகார் அளித்தார். அந்த குழந்தையை கல்மேடு பகுதியில் விற்கப்பட்டு இருப்பதை அறிந்த போலீசார் அங்கு சென்று மீட்டனர். தலைமறைவான இதயம் அறக்கட்டளையின் நிறுவனர் சிவக்குமாரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அடுத்தடுத்து புகார்கள் எழுந்ததை தொடர்ந்து, இதயம் காப்பகத்தில் இருந்த 82பேர் மதுரையிலுள்ள பல்வேறு காப்பகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதில் 6 தாய்மார்களுடன் 8 குழந்தைகள் தனியாக குழந்தைகள் காப்பகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.