பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை, விசாரணைக்காக சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளிக்கு சிபிசிஐடி போலீசார் அழைத்து வந்த போது, அங்கு அவரை வரவேற்க பெண் பக்தைகள் கூட்டமாக கூடியிருந்தனர்.
தனது பாலியல் ஆசைக்காக சிறு, சிறு பெண் பிள்ளைகளை தவறாக பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவை, பெண்கள் சிலர் கையெடுத்து கும்பிட்ட சம்பவமும் அரங்கேறியது.
நேற்றிரவு, செங்கல்பட்டில் இருந்து எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட சிவசங்கர் பாபாவிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
அப்போது, முன்னாள் மாணவிகள் தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு சிவசங்கர் பாபா மறுப்பு தெரிவித்ததோடு, விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பும் அளிக்கவில்லை எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக செயல்பட்டதாக, ஏற்கனவே பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வேறு யாருக்கெல்லாம் இதில் தொடர்பு உள்ளது? எனவும் விசாரணை நடத்தப்பட்டது.
இதன் அடுத்தக்கட்டமாக சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளிக்கு சிவசங்கர் பாபாவை நேரடியாக அழைத்துச் சென்ற சிபிசிஐடி போலீசார் அவனது சொகுசு அறை, மாணவிகளின் விடுதிகள், பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தி ஆதாரங்களை சேகரித்தனர்.
சுஷில் ஹரி பள்ளி வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். சிவசங்கர் பாபாவின் உடல்நிலையைக் காரணம் காட்டி 3 நாட்கள் மட்டுமே நீதிமன்றம் அனுமதி வழங்கியதால், மூன்று நாட்களுக்குள் போதுமான ஆதாரங்களை திரட்டவும், வாக்குமூலம் பெறவும் சிபிசிஐடிபோலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
முன்னதாக, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுஷில் ஹரி பள்ளிக்கு அழைத்துவரப்பட்ட சிவசங்கர் பாபாவை, அங்கு கூடியிருந்த பெண்கள் தியாகி போல் வரவேற்க காத்திருந்தனர். சில பெண்கள் சிவசங்கர் பாபாவை கையெடுத்து கும்பிட்டதையும் காண முடிந்தது.