தமிழ்நாட்டுக்கான கொரோனா தடுப்பு மருந்து ஒதுக்கீட்டை உயர்த்த வலியுறுத்தி மத்திய அமைச்சர் ஹர்சவத்தனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், மக்கள் தொகையை ஒப்பிடும்போது தமிழகத்துக்கு மிகக் குறைந்த அளவே தடுப்பு மருந்து ஒதுக்கியதாகவும், கடந்த காலத்தில் குறைவாக ஒதுக்கியதை ஈடுசெய்யும் வகையில் ஒரு கோடி டோஸ் தடுப்பு மருந்து வழங்கக் கோரியதையும் குறிப்பிட்டுள்ளார்.
அதை ஏற்காமல் ஜூன் ஜூலை மாதங்களில் மற்ற மாநிலங்களைவிடத் தமிழகத்துக்குக் குறைந்த அளவே மருந்து ஒதுக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதில் தனியார் மருத்துவமனைகளின் பங்கு 10 விழுக்காடு மட்டுமே என்பதைப் புள்ளி விவரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார். அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கான உள் ஒதுக்கீட்டை தொண்ணூற்றுக்குப் பத்து என்கிற விகிதத்தில் மாற்றியமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.