திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஸ்மார்ட் போனில் ப்ரீ பயர் விளையாடியபோது ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு மண்டை உடைந்தது. ஆன்லைன் விளையாட்டு அடிமைகளால் 4 பேர் மோதிக் கொண்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஜே.கே.ஜே. காலனி பகுதியைச் சேர்ந்த 20 வயதான சந்தோஷ் தனது நண்பர்களுடன் ஸ்மார்ட் போனில் ஃப்ரீ ஃபயர் கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.
அவருடன் ஆட்டோ ஓட்டுநர் அருண்பாஷா, மணிகண்டன், மோகன், பாலாஜி, கதிரவன் ஆகியோரும் போட்டியாக அங்குள்ள ஒரு வீட்டில் அமர்ந்து மும்முரமாக ப்ரீபையர் விளையாடிக் கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த விளையாட்டில் யார் வெற்றிபெறுவது என்பதில் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்ததாக கூறப்படுகிறது. இதில் சிலரின் சட்டை கிழிந்த நிலையில், எதிரணியில் இருந்த ஒருவன் காலி மதுபாட்டிலை எடுத்து தலையின் மீது அடித்ததில் சந்தோஷின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இதையடுத்து சந்தோஷின் அலறல் சத்தம்கேட்டு அவரது உறவினர்கள், நண்பர்கள் அங்கு ஓடிவந்ததால் உடனிருந்து வெறித்தனமாக பிரீபையர் விளையாடி அடிதடி ரகளையில் ஈடுபட்ட மற்ற இளைஞர்கள் அங்கிருந்து தப்பிஓடி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
சந்தோஷ் அளித்த புகாரின் பேரில் ப்ரீ பையர் பிளேயர்ஸ் 5 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை கைது செய்து விசாரித்த போது விளையாடும் போது ஆபாசமாக பேசி மிரட்டியதால் பதிலுக்கு பாட்டிலால் தாக்கியதாக பிடிபட்ட பிளேயர்ஸ் தெரிவித்துள்ளனர்.