சென்னை தொழிலதிபர் குடும்பத்தை கடத்தி சென்று கட்டிப்போட்டு, அடித்து உதைத்து, சொத்துக்களை எழுதி வாங்கியதாக எழுந்த புகாரில், திருமங்கலம் காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர், எஸ்ஐ ஆகிய 6 போலீசார் உட்பட 10 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சினிமா பாணியில் நிகழ்ந்த சம்பவம் குறித்து அலசுகிறது, இந்த சிறப்புச் செய்தித்தொகுப்பு
2019-ல் சென்னை அயப்பாக்கம் தொழிலதிபர் ராஜேஷ் , அவரது மனைவி, தாயார் என ஒட்டு மொத்த குடும்பத்தையும் கடத்திய திருமங்கலம் காவல்துறையினர், செங்குன்றத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டுக்கு கொண்டு சென்று கட்டி வைத்து, அடித்து உதைத்து, அவர்களின் சொத்துக்களை எழுதி வாங்கிக் கொண்டதாக புகார் எழுந்தது.
புகார்களை விசாரிக்கும் காவல்துறையினர் மீதே புகார்எழுந்ததால் விசாரணையில் தாமதமும் அலைக்கழிப்பும் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. நியாயம் கோரி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், சென்னை மாநகர காவல் ஆணையர், டிஜிபி என உயர் அதிகாரிகளின் உதவியை நாடியதற்கு பலன்கிடைத்தது.
டிஜிபி உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீசார் கடந்த 6 மாதங்களாக நடத்திய விசாரணையில், திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், 3 காவலர்கள், தொழிலதிபர்கள் வெங்கடேஷ், சீனிவாச ராவ், அவரது கூட்டாளிகள் 2 பேர் என மொத்தம் 10 பேருக்கு, புகாரில் தொடர்பிருப்பது தெரியவந்தது.
தொழிலதிபர் ராஜேஷ் மீது எழுத்துப்பூர்வமான புகார் எதுவும் இல்லாமல், விசாரணை என்ற பெயரில், காவல்துறையினர் அத்துமீறி நடந்து கொண்டது சிபிசிஐடி விசாரணையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இவர்கள் மீது ஆள் கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. சொத்து மற்றும் பணத்திற்காக, காவல் அதிகாரிகள் உள்ளிட்ட 10 பேர் கும்பலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், தங்களுக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.