எஸ்பிஐ வங்கியின் டெபாசிட் எந்திரத்துடன் கூடிய ஏடிஎம் மைய கொள்ளை வழக்கில் ஹரியானாவை சேர்ந்த மேலும் ஒரு கொள்ளையனை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் பணம் டெபாசிட் செய்யும் எந்திரங்களுடன் கூடிய எஸ்பிஐ ஏடிஎம்களை குறிவைத்து நூதன முறையில் சுமார் ஒரு கோடி வரை பணம் கொள்ளையடிக்கப்பட்டது. பணம் டெபாசிட் செய்யும் எந்திரங்களில் உள்ள சென்சார் எப்படி வேலை செய்கிறது என்ற நுட்பத்தை பயன்படுத்தி, பல்வேறு ஏடிஎம்களில் சிறுகச் சிறுக பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
அதிலும், ஜப்பானை சேர்ந்த ஓ.கே.ஐ (OKI) என்ற நிறுவனம் தயாரித்த டெபாசிட் எந்திரங்களை இந்த சைபர் கொள்ளையர்கள் குறிவைத்துள்ளனர். ஹரியானாவில், சைபர் குற்றங்களின் தலைநகர் எனப்படும் மேவாட் பகுதியை சேர்ந்த கொள்ளை கும்பலுக்கு தொடர்பிருப்பது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, சென்னையில் இருந்து சென்ற தனிப்படை போலீசார் அங்கு முகாமிட்டுள்ளனர்.
"மேவாட்" கொள்ளை கும்பலை சேர்ந்த, அமீர் அர்ஸ் என்பவன் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, தற்போது போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறான்.
அவன் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹரியானாவில் வீரேந்தர் என்ற மற்றொரு கொள்ளையனையும் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவனையும் சென்னை கொண்டு வந்து விசாரணை நடத்த உள்ளனர்.
இதனிடையே இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஹரியானா மாநிலம் மேவாட் மாவட்டத்தைச் சேர்ந்த 2 குழுக்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதில் ஒரு குழுவின் தலைவன் பெயர் சதக்கத்துல்லாகான் என்பதும் இரு குழுக்களையும் சேர்ந்த சுமார் 30 பேர் கொள்ளையில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. ஹரியானா அதிரடிப்படை போலீசார் 50 பேர் இந்த குற்றவாளிகளை பிடிப்பதற்காக, தமிழக போலீசாருக்கு உதவி செய்து வருகின்றனர்.