வரும் 28ஆம் தேதி காலையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது, கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் மாநிலம் முழுவதும் மே 24-ந் தேதியில் இருந்து 31-ந் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருவதோடு, ஒவ்வொரு கட்டத்திலும் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. 5ஆவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு, வரும் 28-ந் தேதி காலையுடன் முடிவடைகிறது.
இந்த நிலையில் 6-வது முறையாக ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதலாக என்னென்ன தளர்வுகள் வழங்கலாம்? என்பது குறித்தும் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சுகாதாரத்துறை அமைச்சர், செயலர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
4 மாவட்டங்களில் மட்டும் தற்போது பேருந்து போக்குவரத்து உள்ள நிலையில், மேலும் 23 மாவட்டங்களில் பேருந்துகளை இயக்க அனுமதி, சிறிய கோவில்கள், சிறிய துணிக்கடைகள், நகைக்கடைகள் திறக்க அனுமதி உள்ளிட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.