அடக்கப்பட்ட யானைக்குதான் மணி கட்ட முடியும், திமுக அடக்க முடியாத யானை என தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என உறுதியளித்தார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீது எதிர்க்கட்சிகள் முன்வைத்த விவாதங்களுக்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. என்பது யாராலும் அடக்க முடியாத யானை என்று தெரிவித்தார்.
ஆளுநர் உரை ட்ரெய்லர் மாதிரி என்று கூறிய மு.க.ஸ்டாலின், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம், அதில் ஒரு துளியும் மக்களுக்கு சந்தேகம் வேண்டாம் என்றார். அறவழியில் போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வழக்கின் தன்மை பொறுத்து திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார்.
அதிமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை என்று தெரிந்ததும் எடப்பாடி பழனிசாமி அலட்சியமாக இருந்ததன் விளைவுதான் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்ததற்கு காரணம் என்று முதலமைச்சர் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டதை போல், தாம் அலட்சியமாக இருக்கவில்லை என்று மறுப்புத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, தாம் அரசுக்கு ஆலோசனை கூறியபோது, மு.க.ஸ்டாலின் என்ன டாக்டரா? என எடப்பாடி பழனிசாமி கேட்டதாக, முதலமைச்சர் குறிப்பிட்டார். கொரோனாவுக்குப் பிறகு அனைவரும் டாக்டர்கள் ஆகிவிட்டார்கள் என்பதுதான் உண்மை என மு.க.ஸ்டாலின் கூறியபோது அவையில் சிரிப்பலை எழுந்தது.