சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வாகன சோதனையின் போது மதுப்பிரியரை சரமாரியாக கம்பால் தாக்கி கொலை செய்ததாக காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளச்சாரயம் காய்ச்சியவரை பிடிக்க முடியாத விரக்தியில் குடித்தவரை தாக்கிக் கொன்ற சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர், இடையபட்டி - வாழப்பாடி சாலையில், மளிகை மற்றும் பழக்கடைகள் நடத்தி வந்தார்.
குடிப்பழக்கமுடைய முருகேசன், சேலம் மாவட்டத்தில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், செவ்வாய்க்கிழமை மாலை, கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை வெள்ளிமலைப் பகுதிகளில் காய்ச்சப்படும் கள்ளச்சாராயத்தை குடித்து விட்டு நண்பர்கள் 3 பேருடன் திரும்பியுள்ளார். கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டியில் சாராயக்கடத்தலை தடுக்கும் பொருட்டு, வனத்துறை சோதனைச் சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி, முருகேசனை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
முருகேசனும் அவரது நண்பர்களும் மது அருந்தி இருப்பதை, மதுவாடையின் மூலம் அறிந்து கொண்ட எஸ்.ஐ.பெரியசாமி, அவர் ஓட்டிவந்த இரு சக்கரவாகனத்தை பறித்து வைத்துக் கொண்டு நடந்து போகச்சொன்னதால் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியது. போலீசையே எதிர்த்து பேசுகிறாயா? என்ற அதிகாரத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி, திடமான பச்சை கம்ப்பை கொண்டு முருகேசனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகின்றது.
உடன் வந்தவர்கள் அவரை அடிக்க வேண்டாம் என்று எவ்வளவோ கதறிய நிலையிலும், அதை கேட்காமல் கண்மூடித்தனமாக தாக்கிய எஸ்.எஸ்.ஐ பெரியசாமியின் அடி ஒன்று முருகேசனின் தலையின் பின்புறத்தில் பலமாக விழுந்ததால், அவர் சாலையில் அப்படியே மயங்கி சரிந்தார். இந்த சம்பவத்தை தடுக்க முயலாமல் ஆயுதப்படை காவலர் ஒருவர் அப்படியே வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.
மனிதநேயமில்லாத தாக்குதல் நடத்திய போலீசார், உயிருக்கு போராடிய முருகேசனை அப்படியே சாலையில் போட்டுச்சென்று விட, உடன் சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து தும்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். முருகேசனின் உடல் நிலை மோசமடைந்ததால், புதன்கிழமை அதிகாலை உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து முருகேசனை அடித்து கொலை செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்திய சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபினவு உத்தரவின் பேரில், காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி உள்ளிட்ட 3 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வாகனச் சோதனையில் சாராயம் காய்ச்சியவர்களை பிடிக்க இயலாத விரக்தியில் நின்ற எஸ்.எஸ்.ஐ பெரியசாமி, கோபத்தை மது அருந்திய முருகேசனிடம் காட்டி, இந்த கொலையை செய்தது தெரியவந்ததால், அவரை கைது செய்தனர். மேலும் பெரியசாமி பணி இடை நீக்கமும் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் பாலிமர் செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. ஆணைய தலைவரான நீதிபதி எஸ்.பாஸ்கரன், இந்த சம்பவம் தொடர்பாக சேலம் சரக டிஐஜி 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே வியாபாரி முருகேசன் கொலைக்கு நீதி கேட்டு அவரது சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவரது உறவினர்கள், முருகேசனின் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ((காவல் உயர் அதிகாரிகள் அவர்களை சமாதனப்படுத்தியதை தொடர்ந்து முருகேசனின் உறவினர்கள் அவரது சடலத்தை பெற்றுச்சென்றனர்.))
காவல்துறையினர், விசாரணையின் போது கனிவு என்ற சொல்லை கவனத்தில் கொள்ளாமல் , மக்களிடம் கண்மூடித்தனமாக நடந்து கொண்டால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!