மத்திய அரசை ஒன்றிய அரசு என குறிப்பிடுவது ஏன் என சட்டப்பேரவையில் விளக்கமளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசியலமைப்பு சட்டத்தில் கூறியுள்ளதை தான் தாங்கள் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில், ஒன்றிய அரசு என்ற சொல்லுக்கு பொருள் என்ன? எந்த நோக்கத்தோடு அவ்வாறு குறிப்பிடப்படுகிறது என பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசு என சொல்வதை சமூக குற்றம் என நினைக்க வேண்டாம் எனவும், இந்தியா என்பது பல மாநிலங்களை கொண்ட ஒன்றியம் என அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறியுள்ளதைத்தான் பயன்படுத்துவதாகவும் அவர் விளக்கமளித்தார்.
அண்ணா கலைஞர் காலத்தில் பயன்படுத்தாத வார்த்தையை தாங்கள் பயன்படுத்துவதாக சிலர் குற்றம்சாட்டுவதாக குறிப்பிட்ட முதலமைச்சர், அண்ணா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது ஒன்றியம் என்ற வார்த்தையை குறிப்பிட்டதாகவும், அண்ணா ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட திமுக அறிக்கையிலும் ஒன்றிய அரசு என்ற சொல் பயன்படுத்தப்பட்டதாகவும் நினைவு கூர்ந்தார்.