சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மது போதையில் தன்னுடன் வாக்குவாததில் ஈடுபட்ட நபரை காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் லத்தியால் தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகின.
இந்த நிலையில், போதையில் இருந்த அந்த நபர் மருத்துவமனையில் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த கருமந்துறை மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு, பல்வேறு ஊர்களுக்கும் அனுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாழப்பாடியைச் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கருமந்துறை மலைப்பகுதிக்குச் சென்று மது அருந்தி வருவதும் உண்டு.
அந்த வகையில் எடப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவரும் அவருடைய நண்பர்கள் இருவரும் நேற்று கருமந்துறை சென்று மது அருந்திவிட்டு பைக்கில் வந்துள்ளனர்.
மூவரையும் பாப்பநாயக்கன்பட்டி சோதனைச் சாவடியில் மடக்கிய போலீசார், ஒரே இருசக்கர வாகனத்தில் வந்ததாலும் மது அருந்திவிட்டு வந்ததாலும் வாகனத்தைப் பறிமுதல் செய்ய முயன்றுள்ளனர்.
அப்போது போதையில் இருந்த முருகேசன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் போலீசாரை ஆபாசமாக பேசியதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் பொறுமை இழந்த , ஏத்தாப்பூர் உதவி ஆய்வாளர் பெரியசாமி, லட்டியால் முருகேசனை தாக்கத் தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் போதையில் இருந்த முருகேசன் மயக்கமடைந்ததால் அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சைப் பலனின்றி முருகேசன் உயிரிழந்தார்.
உதவி ஆய்வாளர் பெரியசாமி தாக்கியதில்தான் அவர் உயிரிழந்தார் என உறவினர்கள் குற்றம்சாட்டும் நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
இந்த நிலையில் காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி தாக்கியதால்தான் முருகேசன் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் பெரியசாமியை போலீசார் கைது செய்தனர்.
ஏத்தாப்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் வாக்குவாதம் செய்த நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டார்.