மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர் தமிழரசி, மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அப்போது விளக்கமளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட நாள் முதல், அந்த சட்டங்கள் திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி வருவதாக குறிப்பிட்டார்.
தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள உழவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
குடியுரிமை திருத்த சட்டத்தையும் திரும்ப பெறும் தீர்மானமும் வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.