ஆளுநர் உரை முற்றிலும் ஏமாற்றம் அளிப்பதாகக் கூறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், மாணவர்களின் கல்விக் கடன் ரத்து, 5 சவரன் வரை கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் ரத்து எனும் திமுகவின் வாக்குறுதிகள் என்ன ஆனது என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆளுநர் உரைக்குப் பிறகு, சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் கலைவாணர் அரங்கில், அதிமுக சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பான எந்த அறிவிப்பும் ஆளுநர் உரையில் இல்லை என குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, நீட் உள்ளிட்ட விவகாரங்களில், தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சு, தேர்தலுக்கு பின்பு ஒரு பேச்சு என திமுக செயல்படுவதாக புகார் கூறினார்.
அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை சரியாக மேற்கொள்ளப்படுவதில்லை என குறை கூறிய எடப்பாடி பழனிசாமி, கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தோல்வியை தழுவிவிட்டது என்றும் கூறினார்.