கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்தன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது.
கொரோனா தொற்றின் அடிப்படையில் வகை 1-ல் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கு அத்தியாவசிய பணிகளுக்காக ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படுகிறது.
அதன்படி, எலக்ட்ரீசியன்ஸ், பிளம்பர்ஸ், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர்கள் இ-பதிவுடன் சென்று வர அனுமதிக்கப்படுகின்றனர்.
மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் அனுமதிக்கப்படுகிறது.
வேளாண் உபகரணங்கள், பம்பு செட் பழுது நீக்கும் கடைகள் பிற்பகல் 2 மணி வரை செயல்பட்டன. ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 25% பணியாளர்களுடன் செயல்பட்டன.
வகை 2-ல் உள்ள அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்களில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளும், கூடுதலாக செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.
மளிகை, காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படுகின்றன. இ-காமர்ஸ் வணிக சேவை நிறுவனங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
அத்யாவசிய அரசுத் துறைகள் 100% ஊழியர்களுடனும், பிற அரசுத்துறைகள் 50% பணியாளர்களுடனும் செயல்பட்டு வருகின்றன.சார் பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக இயங்கி வருகின்றன.
வகை 3-ல் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து சேவை உள்பட பல்வேறு பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து 50சதவீத பயணிகளுடன் குளிர்சாதன வசதியின்றி காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.
வாடகை வாகனங்கள், டாக்சிகள், ஆட்டோக்கள் இ-பதிவு இல்லாமல் பயணிக்கின்றன. திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் 100 பேர் மட்டும் பணிபுரியும் வகையில் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்புகளுக்கு பிந்தைய தயாரிப்பு பணிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மெட்ரோ ரெயில்கள் 50 சதவீத பயணிகளுடன் இயக்கப்பட்டு வருகின்றன.
இதுதவிர்த்து மேற்குறிப்பிட்ட 4 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கு நேரத் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.