சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரசு அலுவலகங்கள் இன்று முதல் முழு அளவில் செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் அலுவலகங்கள் 50 சதவீதப் பணியாளர்களுடன் இயங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருகிற 28ந் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கூடுதல் செயல்பாடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி மளிகை, காய்கறி உள்ளிட்ட கடைகள் மாலை 7 மணி வரை செயல்படலாம். இன்றுமுதல் அனைத்து அரசு அலுவலகங்களும் 100 விழுக்காடு பணியாளர்களுடனும், தனியார் நிறுவனங்கள் 50 விழுக்காடு பணியாளர்களுடனும் இயங்கும். திறந்த வெளியில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தவும், வாடகை வாகனங்கள் இ-பதிவு இன்றி செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் 100 பேர் பணிபுரியும் வகையில் நடைபெறும்.
திருச்சி, திருநெல்வேலி, அரியலூர், தேனி, தென்காசி, மதுரை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் உள்ளிட்ட 23 மாவட்டங்களில், இன்றியமையாத அரசுத் துறைகள் முழு அளவிலும், மற்ற அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடனும் செயல்படும்.
கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்றும் கூடுதலாக எந்தத் தளர்வும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.