சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 40 நாட்களுக்குப் பின் பேருந்துகள் இயக்கப்பட்டன. காலையில் குறைந்த எண்ணிக்கையிலேயே பயணிகள் பேருந்துகளில் பயணித்தனர்.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 40 நாட்களுக்குப் பின்னர் பேருந்துகள் இயக்கப்பட்டன.
பேருந்துகள் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பின்னர் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி, வெள்ளைப் பலகைப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றும் பொருட்டு பேருந்துகளில் 50 விழுக்காடு பயணிகளே அனுமதிக்கப்பட்டனர். இதனால் தனிமனித இடைவெளியுடன் பயணிகள் பயணித்தனர்.
குறைவான எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நான்கு பணிமனைகளில் உள்ள 160 பேருந்துகளில் இருந்து 100 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் நகர்ப்புறங்களிலும் பேருந்து சேவை துவங்கியுள்ளது.