மதனின் யூடியூப் சேனல்களை முடக்கியது ஏன் என்பது குறித்து விளக்கமளித்துள்ள போலீசார், பப்ஜி விளையாட்டை நிறுத்திவிட்டு படிப்பில் கவனம் செலுத்த மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
விளையாட்டு என்ற பெயரில் ஆபாச அர்ச்சனை, சிறுவர்கள் மற்றும் பெண்களின் மனதில் விஷத்தை விதைத்த பப்ஜி மதன் நடத்தி வந்த யூடியூப் சேனல்களை பின்தொடர்ந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டும்.
இதில் சுமார் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பள்ளி பயிலும் சிறுவர் சிறுமியர் என்கின்றனர் விசாரணை நடத்திய போலீசார்.
இந்த ஊரடங்கு நாட்களில் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்வதாக கூறி, மதனுடன் ஆன்லைன் விளையாட்டில் பல சிறுவர் சிறுமியர் ஈடுபட்டிருந்ததாகவும், மதனின் ஆபாச பேச்சுக்கள், பெண்களை இழிவுபடுத்திப் பேசும் வார்த்தைகள் தவறு என்று உணராத 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமியர் அவரைப் பின்தொடர்ந்து வந்ததாகக் கூறும் காவல்துறையினர், இது அவர்களது எதிர்காலத்தை பாழாக்கும் என்பதை உணர்ந்துதான் உடனடியாக அவனது யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.
யூடியூப் சேனலில் பப்ஜி விளையாடுவதை நிறுத்திவிட்டு, பள்ளி பாடங்களில் கவனம் செலுத்தி நன்றாக படிக்க வேண்டும் என மதனை பின் தொடரும் சிறுவர் சிறுமியருக்கு போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.