கோவில் சொத்துக்களை டிரோன் கேமரா மூலம் புவிசார் தகவல் அடிப்படையில் கண்டறிந்து வருவதாகவும், இந்தப் பணி விரைவில் முடிக்கப்படும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து அறநிலையத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களின் சொத்துக்கள் விவரங்கள், அந்தச் சொத்துக்கள் குத்தகையில் உள்ளதா, வாடகையில் உள்ளதா என்பன உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்யக் கடந்த ஆண்டு நவம்பரில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் இந்து அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் தாக்கல் செய்த அறிக்கையில், டிரோன் கேமரா மூலம் முப்பரிமாண அடிப்படையில் படம்பிடித்துச் சொத்தின் மதிப்பு கணக்கிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவில் சொத்துக்களின் எண்ணிக்கை, அவற்றின் தற்போதைய வாடகை அல்லது குத்தகையின் நிலை உள்ளிட்ட விவரங்களும் இணையத்தளத்தில் பதிவேற்றப்படும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த அறிக்கையைப் பதிவு செய்த நீதிபதி, வழக்கை ஜூலை 21ஆம் நாளுக்குத் தள்ளிவைத்தார்.