திருவாரூர் அருகே ஏ.டி.எம்-ல் கொள்ளையடிக்க முயன்றதை தடுத்தவரை குத்திக் கொலை செய்த 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் சிக்கிய கொள்ளையர்களில் ஒருவனை மீட்க சினிமா பாணியில் போலீசார் முன்பே கொலை செய்துவிட்டு தப்பியோடிய கொள்ளையர்களுக்கு மாவுக்கட்டு போடப்பட்டதின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு...
திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் கூடூர் என்ற இடத்தில் SBI வங்கியின் ATM உள்ளது. நள்ளிரவில் 2 பைக்குகளில் வந்த கொள்ளையர்கள் 4 பேர், இந்த ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர். சப்தம் கேட்டு எழுந்த எதிர் வீட்டுக்காரர், ஏ.டி.எம். அமைந்துள்ள கட்டிடத்தின் உரிமையாளர் தமிழ்செல்வனுக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளார். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில், அக்கம்பக்கத்தினரும் அங்கு கூடியதால், நிலமையை உணர்ந்து கொள்ளையர்கள் தப்பியோட முயன்றனர்.
இரண்டு இரண்டு பேராக வெவ்வேறு திசைகளில் தப்பியோட முயன்ற கொள்ளையர்களில் ஒருவன் மட்டும் போலீஸ் கையில் சிக்கினான். அவனிடம் போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போதே, தப்பியோடிய கொள்ளையன்கள் இரண்டு பேர் மீண்டும் ஆயுதங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து, பைக்கை வைத்து போலீசார் மீது மோதியுள்ளனர்.
இதனைக் கண்ட பொதுமக்கள் மிரண்டு ஓடிய நிலையில், ஆயுதங்களை வைத்து போலீசாரை தாக்க முயன்றுள்ளனர். அப்போது குறுக்கே நின்ற கட்டிட உரிமையாளரான தமிழரசனின் மார்பில் ஆயுதம் பட்டுள்ளது. இதில் தமிழரசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து உடனடியாக கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
அவர்கள் விட்டுச் சென்ற இருசக்கர வாகனத்தை கைப்பற்றிய போலீசார், தனிப்படை அமைத்து தேடி வந்தனர். மாவட்டத்திலுள்ள அனைத்து சோதனை சாவடிகளும் உஷார் படுத்தப்பட்டன. இதையடுத்து கொள்ளையர்கள் கூத்தாநல்லூர் பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்ற போலீசாரை பார்த்து மீண்டும் தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையர்களை, வடபாதிமங்லகலம் வரை துரத்திச் சென்று போலீசார் கைது செய்தனர்.
கைது செய்ய துரத்திச் செல்லும் போது கொள்ளையர்கள் கீழே விழுந்து விட்டதாகவும், இதனால், மாவுக் கட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கொள்ளையர்கள் 4 பேரும் கல்லூரி மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. படிக்கின்ற வயதில் பாதை மாறி காசுக்கு ஆசைப்பட்டு கொள்ளை அடிப்பதில் வில்லனிசம் காட்ட நினைத்த கல்லூரி மாணவர்கள், கம்பி எண்ணும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.