ராமநாதபுரம் மாவட்டம் பாண்டமங்கலம் அருகே, ஊர்க் கிணற்றையும் ஊரணியையும் தூர்வாரிப் பராமரித்த கிராம மக்கள், தண்ணீர்த் தட்டுப்பாட்டை போக்கியதோடு, அண்டை கிராமத்துக்கும் தண்ணீர் வழங்கி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பாண்டமங்கலம் அருகே உள்ள சிறுகுடி கிராமத்தில் 25 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
கோடையின் கொடுமையாலும், காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் கைகொடுக்காததாலும் ஊரணிகள் வற்றியதால் அங்கு கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவியது.
இதன் காரணமாக தண்ணீர் கிடைக்காமல் பல கிலோ மீட்டர் தூரம் தள்ளுவண்டிகளில் குடத்தை வைத்துக் கொண்டு கிராம மக்கள் அலைந்து வந்தனர்.
அதே நேரத்தில் பக்கத்துக் கிராமமான வேலாங்குளத்தின் நிலைமையோ தலைகீழ்! ஆழமாகத் தூர்வாரப்பட்ட ஊரணி, பராமரிப்புடன் இருக்கின்ற ஆழமான ஊர்க்கிணறு ஆகியவற்றால் கடந்த 4 ஆண்டுகளாக குடிநீர்ப் பஞ்சமில்லா ஊராக மாறியுள்ளது வேலாங்குளம்..!
இதற்கு முழு முதற்காரணம் ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளரான ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் காளிமுத்து.
கடுமையான குடிநீர் பஞ்சத்தால் வேலாங்குளம் மக்கள் பரிதவிக்க, அப்போது பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்ட காளிமுத்து, தங்கள் ஊரில் உள்ள ஊரணியை ஆழமாகத் தூர்வாரியதோடு, ஊரணி நிறைந்தால் உபரிநீர் ஆழமான கிணற்றில் தேங்கும் வகையில் வடிவமைத்துள்ளார்.
அவரது எண்ணப்படியே மழைக்காலத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் எல்லா ஊரையும் போல வேலாங்குளம் ஊரணியும் நிரம்பியது, ஆனால் மற்ற ஊர்களில் கோடை வெயிலால் ஊரணி வற்றிய நிலையில், வேலாங்குளத்தில் பராமரிக்கப்பட்ட கிணறும், வற்றாத ஊரணியும் கை கொடுத்ததால் இந்த கோடையிலும் அங்கு தண்ணீர் உள்ளது.
இந்த நிலையில் தண்ணீர் இன்றி தவித்த சிறுகுடி கிராமத்தினர், வேலாங்குளம் பஞ்சாயத்துத் தலைவர் காளிமுத்துவை சந்தித்து தண்ணீர் கொடுக்குமாறு உதவி கேட்டுள்ளனர்.
ஊரில் உள்ள சிலர் எதிர்ப்புத் தெரிவிக்க, அவர்களையும் சம்மதிக்க வைத்த காளிமுத்து, வேலாங்குளத்தில் இருந்து சிறுகுடி கிராமத்திற்க்கு ஆறு கிலோ மீட்டர் தூரம் குழாய் அமைத்து, தினமும் 5000 லிட்டர் குடிநீரை வழங்கி வருகின்றார்.
சிறுகுடி பெண்கள் நன்றியோடு அந்த தண்ணீரை குடங்களில் பிடித்துச்செல்கின்றனர்.
ராமநாதபுரத்தில் வறட்சியான பகுதிகளில் பக்கத்து வீட்டுக்கு ஒரு குடம் தண்ணீர் கொடுப்பதற்கே தயங்கும் மக்கள் மத்தியில், பக்கத்து ஊருக்கே தண்ணீர்கொடுக்கும் வேலாங்குளம் மக்களின் தாராளகுணம் பாராட்டுக்குரியது.
பல கோடிகளில் கொண்டுவரப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் கைவிட்டபோதும், மக்களின் கடின உழைப்பால் தண்ணீர்ப் பிரச்சனையில்லா வேலாங்குளத்தைப் போல, மற்ற கிராமங்களும் கிணறுகளை முறையாகப் பராமரித்து, ஊரணியை ஆழப்படுத்தி நீரைத் தேக்கினால் கோடை காலங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கலாம்..!