பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சிவசங்கர் பாபாவை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
உத்தரகாண்டில் இருந்து தப்பியோடி டெல்லியில் தலைமறைவாகியிருந்த சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் புதன் கிழமை கைது செய்தனர்.
பின்னர், அவரை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற ஆணை பெற்று இரவோடு, இரவாக சென்னை அழைத்து வந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகம் அழைத்து வரப்பட்ட சிவசங்கர் பாபாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
பின்னர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர்படுத்தப்பட்டார்.
முன்னதாக, சிவசங்கர் பாபா அறையில் கைப்பற்றப்பட்ட லேப்டேப்புகள், ஹார்டு டிக்ஸ்குகள் ஆகியவை உட்பட சிபிசிஐடி போலீசார் தயாரித்த குற்ற ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து, சிவங்கர் பாபாவை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி அம்பிகா உத்தரவிட்டார். பின்னர், சிவசங்கர் பாபா செங்கல்பட்டு மாவட்ட சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக மேலும் புகார் கொடுக்க வேண்டும் என்றால், விசாரணை அதிகாரியான டிஎஸ்பி குணவர்மன் கைபேசி எண் 98405 58992 மற்றும் காவல் ஆய்வாளர் ரேணுகாதேவி கைபேசி எண் 98406 69982 மற்றும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம் என்று காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.