மதுரையில் கந்துவட்டி கொடுமை தாங்காமல் வீடியோ வாக்குமூலம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட ஒருவர், தனது குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு கண்ணீருடன் போலீசாருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை மகபூப்பாளையம் பகுதியில் உணவகம் நடத்தி வந்த முஹம்மது அலி என்பவர் ஓராண்டுக்கு முன் தனது உணவகத்தை மேம்படுத்த தெரிந்தவர்கள், நண்பர்கள் மூலம் அதே பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரிடம் 3 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். மாதம் 12 ஆயிரம் ரூபாய் வீதம் வட்டிக் கட்டிக் கொண்டு வந்தவர், இடையில் கொரோனா ஊரடங்கு காரணமாக உணவகம் மூட வேண்டிய சூழல் ஏற்பட்டதால், சில மாதங்கள் வட்டியைக் கட்ட முடியாமல் போயுள்ளது.
இதனால் அந்தக் கடன் 5 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து தனது நண்பர்கள் மூலம் அங்கே இங்கே புரட்டி 6 லட்சம் ரூபாய் வரை செலுத்திவிட்டதாகக் கூறும் முகம்மது அலி, மேலும் பணம் கேட்டு செல்வகுமார் தன்னை துன்புறுத்தியதாகக் கூறுகிறார்.
தன்னையும் தனக்குப் பணம் வாங்கிக் கொடுத்தவர்களையும் கூட்டாளிகளோடு வீடு தேடி வந்து செல்வகுமார் ஆபாசமாகப் பேசி மிரட்டியதாகவும் அவரது டார்ச்சர் தாங்காததாலேயே தாம் தற்கொலை செய்துகொள்வதாகவும் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு முகம்மது அலி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தனது தற்கொலைக்குப் பிறகு மனைவிக்கும் இரு குழந்தைகளுக்கும் தனக்காக பணம் வாங்கிக் கொடுத்த நண்பர்களுக்கும் சம்மந்தப்பட்ட நபர் மூலமாக எவ்வித ஆபத்தும் வந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும் என முகம்மது அலி தனது வீடியோவில் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், செல்வகுமார் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.