சுஷீல் ஹரி இண்டெர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவின் பாலியல் அத்துமீறல்களுக்கு, உடந்தையாக செயல்பட்டதாக அப்பள்ளியின் ஆசிரியைகள் 2 பேர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. கல்வியை போதிக்கும் டீச்சரே, மாணவிகளை மூளைச் சலவை செய்து தவறான பாதைக்கு அனுப்பி இழிவான செயல்களில் ஈடுபட்டு வந்த அதிர்ச்சி தகவலும் முதல் தகவல் அறிக்கையில் கசிந்துள்ளது.
தன்னை கடவுளின் அவதாரம் எனக்கூறிக் கொள்ளும் சிவசங்கர் பாபா, சென்னை கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இண்டர்நேஷ்னல் என்ற உண்டு, உறைவிட பள்ளியை நடத்தி வருகிறார். கடவுளாக தன்னை பாவித்துக் கொண்டு மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், உத்தரகாண்டில் தலைமறைவாகியுள்ள சிவசங்கர் பாபாவை பிடிக்க தனிப்படை டேராடூன் விரைந்துள்ளது. போக்சோ வழக்கில் சிக்கி விசாரணை நடைபெற்று வரும் நிலையில் வெளிநாடு தப்பாமல் இருக்க சிவசங்கர் பாபாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசும் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியிலேயே யூ.கே.ஜி முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவியின் புகாரில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
சிவசங்கர் பாபாவின் பாலியல் அத்துமீறல்களுக்கு அங்கு பணிபுரியும் ஆசிரியைகளும் உடந்தையாக செயல்பட்டது மாணவியின் புகார் மூலம் அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து, அங்கு பணிபுரியும் ஆசிரியைகள் தீபா, பாரதி ஆகிய இருவரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அந்த பள்ளியில் பயிலும் மாணவிகள் யாரேனுக்கும் பிறந்தநாள் வந்தால், சிவசங்கர் பாபாவிடம் ஆசிர்வாதம் வாங்குவதற்காக ஆசிரியையகள் இருவரும் அழைத்துச் செல்வர் எனக் கூறப்படுகிறது. அவ்வாறு, ஆசீர்வாதம் வாங்கச் செல்லும் மாணவிகளிடம் விலையுயர்ந்த ஆடைகள், பரிசுகளை கொடுத்து சிவசங்கர் பாபா, முத்தம் கொடுத்து அத்துமீறியதாகவும் மாணவி புகார் மனுவில் கூறியுள்ளார்.
முத்தம் தருவது எப்படியென கற்றுத் தருவதாக கூறி மாணவிகளிடம் சிவசங்கர் பாபா எல்லை மீறியதும் தெரியவந்துள்ளது. பன்றதெயெல்லாம் பண்ணிட்டு, கடவுளின் குழந்தையான நீ இதற்கெல்லாம் பயப்படக்கூடாது என மாணவிகளிடமே மூளைச் சலவை செய்து வந்த இழி செயலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பொதுத்தேர்வு நடக்கும் நேரங்களில், 10,12-ம் வகுப்பு மாணவிகள் அங்குள்ள விடுதியில் இலவசமாக தங்கிக் கொள்ளலாம் என அறிவித்து, மாணவிகளை தங்க வைத்து, ஒரு நாளைக்கு ஒரு மாணவி என மூளைச்சலவை செய்து சிவசங்கர் பாபாவின் பாலியல் இச்சைக்கு ஆசிரியைகள் அனுப்பி வைப்பார்கள் என்ற கொடூர தகவலும் வெளியாகியுள்ளது.
மேலும், சிவ சங்கர் பாபாவுக்கு உடந்தையாக செயல்பட்ட சில ஆசிரியைகளும், ஊழியர்களும் விசாரணையில் சிக்குவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.