டாஸ்மாக் திறக்கப்படாத மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள மதுக்கடைகளுக்கு படையெடுக்கும் குடிகாரர்கள், 2 கி.மீ தூரம் வரை வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து மது வாங்கிச் செல்கின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத நிலையில், அண்டையில் உள்ள திருச்சி மாவட்ட எல்லையில் ஆண்டாபுரம் என்னும் பகுதியில் டாஸ்மாக் கடை திறந்துள்ளது. அங்கு இரு மாவட்ட மது பிரியர்களும் குவிந்து வருகின்றனர். சுமார் 2 கி.மீ. வரை நீண்ட வரிசையில் கடும் வெயிலில் காத்திருந்து மது பாட்டில்களை வாங்கி சென்ன்றனர். இளைஞர்களுக்கு இணையாக தள்ளாடும் வயதிலும் முதியவர்களும் போட்டி போட்டுக்கொண்டு வரிசையில் நின்றனர்.
கரூர் மாவட்டத்தில் மதுபான கடைகள் திறக்கப்படாததால், திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கடைகளுக்கு கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். திண்டுக்கல் மாவட்ட ஆதார் கார்டு மற்றும் அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் மதுபாட்டில்கள் வழங்கப்படும் என அறிவித்தாலும் மதுக்கடைகளில் கூட்டம் தள்ளிச் சாய்கிறது. கொரோனா பற்றிய அச்சம் ஏதுமின்றி முண்டியடித்து, ஒருவரை ஒருவர் இடித்துத் தள்ளிக் கொண்டு குடிகாரர்கள் வரிசையில் நின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மதுக்கடைகளில் இரண்டாம் நாளாக கூட்டம் காணப்படுகிறது. மதுக்கடைகள் திறக்கப்படாத தஞ்சை மாவட்டத்தில் இருந்து ஏராளமான மதுப் பிரியர்கள் இருசக்கர வாகனத்தில் குவிந்தனர். காவல்துறை மூலம் டோக்கன் வழங்கப்பட்டு ஒரு நபருக்கு அதிகபட்சமாக 4 குவாட்டர் பாட்டில் மட்டும் விற்கப்படுகிறது.