நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் அருகே மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, வழிப்பறி கொள்ளையர்கள் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றதாக நாடகமாடிய வங்கி ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர். திருமணத்திற்கு முந்தைய கல்லூரி காதலை தொடர்ந்ததால் நிகழ்ந்த கொடூர கொலை சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
ஈரோடு மாவட்டம் அந்தியூர் கிணற்று தெரு பகுதியை சேர்ந்தவர் சபரிநாதன். வங்கி ஊழியரான இவருக்கும், சேலம் மாவட்டம் ஆத்தூர் ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்த தரணி தேவி என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு ஒன்றரை வயதில் கவின் பிரசன்னா என்ற ஆண் குழந்தை உள்ளநிலையில் கணவனின் நடவடிக்கை பிடிக்காததால், மனைவி தரணிதேவி ஆத்தூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். கடந்த ஆறு மாத காலமாக தாய்வீட்டில் இருந்த மனைவி தரணிதேவியை கடந்த சனிக்கிழமையன்று சந்தித்த சபரிநாதன், மனைவியுடனும் அவரது குடும்பத்தினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி மனைவியை சமாதானம் செய்து காரில் வீட்டிற்கு அழைத்து வந்தார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக கோட்டைமேடு பகுதி மேம்பாலத்தில் வந்த போது, இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் காரை வழிமறித்து தன்னையும் தனது மனைவியும் தாக்கி மனைவியின் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றதாகவும், இதில் மூர்ச்சை அடைந்த தனது மனைவியை, பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க தூக்கிச் சென்ற பொழுது, அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதாகவும், குமாரபாளையம் காவல் நிலையத்தில் சபரிநாதன் புகார் செய்தார்.
இதுகுறித்து தகவலறிந்த கோவை மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் மற்றும் நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுராஜ்குமார் தாகூர் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள 4 தனிப்படை அமைத்தனர். இந்த 4 தனிப்படை குழுவினரும் பல்வேறு பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அந்த இடத்தில் வழிப்பறி நடந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பதை கண்டறிந்ததோடு, எப்போதும் தரணி தேவியுடன் இருக்கும் அவரது ஒன்றரை வயது குழந்தையை வலுக்கட்டாயமாக மாமியார் வீட்டில் விட்டு வந்த கணவர் சபரிநாதன் மீது போலீசுக்கு சந்தேகம் வலுத்தது. மனைவியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட கல்லூரி காதலியின் கடிதத்தால் இந்த கொடூர கொலை சம்பவத்தில் துப்பு துலங்கியது
சபரிநாதன் கல்லூரியில் படிக்கும் போதே அவருடன் படித்த, ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்த ரேவதி என்ற மாணவியுடன் காதலில் விழுந்துள்ளார். வீட்டிற்கு தெரியாமல் திருட்டுத்தனமாக நண்பர்கள் உதவியுடன், பண்ணாரி அம்மன் கோவிலில் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. சபரிநாதன், ரேவதியுடன் கோபியில் தனி வீட்டில் யாருக்கும் தெரியாமல் குடும்பம் நடத்தி வந்தநிலையில், சபரிநாதனுக்கு, அவரது பெற்றோர் தரணி தேவியை பெண் பார்த்து ஊரரிய திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இருவருக்கும் கவின் பிரசன்னா என்ற ஒன்றரை வயது மகன் உள்ளநிலையில் சபரிநாதனின் கல்லூரி காதலி ரேவதி, கடிதம் ஒன்றை எழுதி மனைவி தரணி தேவிக்கு அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் சபரிநாதனுக்கு முதல் மனைவி நான் தான் என்று உரிமை கொண்டாடிய அவர் , தன்னால் மட்டுமே சபரினாதனை சந்தோஷமாக் வைத்திருக்க முடியும் என்றும் அதனால் நீ என் வாழ்க்கையை விட்டு விலகி விடு எனவும் கூறி தாங்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் போட்டோக்களை இணைத்து இருந்தார்.
இதனால் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவனை பிரிந்து தாய்வீட்டிற்கு சென்றுள்ளார் தாரணிதேவி. 6 மாதமாக காதலி வீட்டில் இருந்த சபரிநாதனிடம், ஊரரிய திருமணம் செய்த தாரணிதேவியை எல்லோரும் மனைவி என்று அழைக்கும் நிலையில், அதற்கு முன்னதாக கல்லூரி படிக்கும் போதே கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் நடத்திவரும், தன்னை எல்லோரும் கீப் என்றே அழைப்பதாகவும் வேதனை தெரிவித்த ரேவதி அழுத்தம் கொடுத்துள்ளார். இதன் காரணமாக கடுமையான மனக்குழப்பத்தில் இருந்த சபரிநாதன் தரணி தேவியை தீர்த்துக்கட்ட முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
ரேவதி அனுப்பிய கடித விவரம் தரணி தேவியின் குடும்பத்திற்கு தெரியாது என நினைத்த சபரி நாதன், மனைவியின் வீட்டிற்கு சென்று தனி குடித்தனம் அழைத்துச்செல்வதாக கூறி 20 ஆயிரத்திற்கும் மேல் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் பாத்திரங்களுடன் தனது மாமனாருடைய காரில் மனைவி தாரணியை அழைத்துக் கொண்டு புறப்பட்டுள்ளான். முன்னதாக தனது குழந்தையை ஆத்தூரில் மாமனார் வீட்டிலேயே விட்டு விட்டு மனைவியுடன் கிளம்பியுள்ளார்.
வழியில் சங்ககிரி அருகே ஒரு ஹோட்டலில் உணவருந்திவிட்டு பிற்பகல் 2.30 மணி அளவில் கிளம்பிய போது சபரிநாதன் மற்றும் தரணி இடையே ரேவதி தொடர்பான பேச்சு எழுந்து, வாக்குவாதம் முற்றியது. அப்போது ஆத்திரம் அடைந்த சபரிநாதன், மனைவி தரணி தேவியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக சுட்டிக்காட்டும் காவல்துறையினர், கார் டிக்கியில் வைத்திருந்த அரிவாள் மனையை எடுத்து காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதோடு, வீட்டிற்காக வாங்கிய கத்தியை எடுத்து சாலையில் போட்ட சபரினாதன், தரணி தேவியின் 7 பவுன் தங்க சங்கிலியை கழட்டி கைக்குட்டையில் சுற்றி அருகிலிருந்த ஆசிரியர் காலனி பகுதியில் வீசிவிட்டு வழிப்பறி கொள்ளையர்களால் கொலை நடந்தது போன்று நாடகமாடி சிக்கியதாக தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சபரினாதன் , குமாரபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 15 நாட்கள் காவலில் ராசிபுரம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டான். ***
இதற்கிடையே இந்த கொலை சம்பவத்துக்கு மூலக் காரணமான சபரிநாதனின் கல்லூரி காதலி ரேவதியையும், முதல் திருமணத்தை மறைத்த சபரினாதனின் பெற்றோரையும் காவல்துறையினர் கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கையை தாரணி தேவியின் பெற்றோர் முன்வைத்துள்ளனர்.
கல்லூரி காதலிக்காக கணவனே மனைவியை கொலை செய்து நாடகமாடிய சம்பவம் குமாரபாளையம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.