தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் மேலும் கூடுதல் தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. தேநீர்க் கடைகள், சலூன் கடைகள், டாஸ்மாக் திறக்கப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு இன்று முதல் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இதில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களை தவிர சென்னை உட்பட 27 மாவட்டங்களில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அமல்படுத்தப்படுகின்றன.
அதன்படி காலை 6 முதல் மாலை 5 வரை தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. தேநீர் அருந்துபவர்கள் கடைக்கு அருகில் நின்று அருந்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இனிப்பு, கார வகைகள் விற்கும் கடைகளையும் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மதுபானக் கடைகள் தினசரி காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி அளித்துள்ள அரசு, அதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
குளிர்சாதன வசதியின்றி சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களை திறக்கவும் அனுமதி வழங்கி உள்ளது. மொபைல்போன், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பிற்பகல்வரை செயல்படலாம். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை 20 சதவீத பணியாளர்களுடன் இயங்க அரசு அனுமதித்துள்ளது.
அரசு அலுவலகங்களில் இருந்து சான்றிதழ், சேவைகளைப் பெற இ-சேவை மையங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளுக்கு தமிழக அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில் கட்டுமான நிறுவன அலுவலகங்கள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அறிவுறுத்தியுள்ளது.