கொரோனா காலத்தில் இணை நோய்களால் மரணமடைந்தோரின் இறப்புச் சான்றிதழ்களை வல்லுநர் குழுவைக் கொண்டு ஆய்வு செய்யத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனாவால் இறந்தோருக்கு கொரோனா மரணம் என இறப்புச் சான்றிதழில் குறிப்பிடாததால் அவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிவாரண உதவிகள் மறுக்கப்படுவதாகக் கூறி ராஜலட்சுமி என்பவர் வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கொரோனாவால் ஏற்பட்ட இறப்புகளை முறையாகப் பதிவு செய்யவில்லை என நாடு முழுவதுமே குறை கூறப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
மரணம் குறித்த தெளிவான பதிவுகள் இருந்தால் தான், எதிர்காலத்தில் தொற்றுப் பரவலைச் சமாளிப்பதற்கும், நிவாரணம் வழங்குவதற்கும் உதவியாக இருக்கும் எனத் தெரிவித்தனர்.
கொரோனா காலத்தில் இணைநோய்களால் மரணமடைந்தோரின் இறப்புச் சான்றிதழ்களை வல்லுநர் குழுவைக் கொண்டு ஆய்வு செய்யவும், ஆய்வின் முதற்கட்ட அறிக்கையை ஜூன் 28 அன்று தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.