தஞ்சாவூரில் அரசு ராஜா மிராசுதார் மகப்பேறு மருத்துவமனையில், பச்சிளம் பெண் குழந்தையின் கை கட்டைவிரல், செவிலியரின் அலட்சியத்தால் துண்டிக்கப்பட்டு விட்டதாக புகார் எழுந்துள்ளது.
தஞ்சை அரசு ராஜா மிராசுதார் மகப்பேறு மருத்துவமனையில், காட்டூரை சேர்ந்த கணேசன் மனைவி பிரியதர்ஷினி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தை பிறந்த பிறகு, சில சிகிச்சைகள் தேவைப்பட்ட நிலையில், 15 நாட்கள் கழித்து நேற்று தாயும் சேயும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அப்போது குழந்தையின் கையில் டிரிப்ஸ் ஏற்றுவதற்காக போடப்பட்டிருந்த ஊசி அசையாமல் இருப்பதற்காக கட்டியிருந்த கட்டை செவிலியர் அகற்றியுள்ளார்.
இந்த முயற்சியில் கத்தரிக்கோல் தவறுதலாக பட்டதில், பச்சிளங்குழந்தையின் கட்டை விரல் துண்டாகியுள்ளது. ரத்தம் பெருக்கெடுத்து குழந்தை வீறிட்டு அழுத நிலையில், கை கட்டை விரலுக்கு கட்டுப்போட்டு மீண்டும் அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பச்சிளம் பெண் குழந்தையின் கை கட்டைவிரல், செவிலியரின் அலட்சியத்தால் துண்டிக்கப்பட்ட சம்பவம் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.