தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இன்று முதல் காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் திறக்கப்படுகின்றன. அரசு அலுவலகங்கள் 30 சதவீதப் பணியாளர்களுடன் இன்று முதல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தளர்வற்ற ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில், சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் இன்று திறக்கப்படுகின்றன. காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
மீன் சந்தைகள், இறைச்சிக் கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரசு அலுவலகங்களும் 30 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட உள்ளன. சார்பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 விழுக்காடு டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டுப் பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. தீப்பெட்டித் தொழிற்சாலைகள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் பணியாளர், பிளம்பர், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர், தச்சர் போன்ற தொழிலாளர்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இ பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளது.
மின்பொருட்கள் விற்பனைக் கடைகள், மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள், ஹார்டுவேர் கடைகள், வாகன உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், புத்தகங்கள் எழுதுபொருட்கள் விற்பனைக் கடைகள், வாகனப் பழுது பார்ப்பகங்கள் இன்று முதல் இயங்கும்.
வாடகை வாகனங்கள், டாக்சி, ஆட்டோக்களில் பயணிகள் இ பதிவுடன் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. டாக்சிகளில் ஓட்டுநர் தவிர மூவரும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இருவரும் பயணிக்கலாம்.