தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களைத் தவிரச் சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
தனியாகச் செயல்படுகின்ற மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள், காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். இவற்றுடன் கூடுதலாகத் தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள், அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இ பதிவுடன் அனுமதிக்கப்படும்.
மின் பணியாளர், பிளம்பர், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர், தச்சர் போன்ற தொழிலாளர்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இ பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவர். மின்பொருட்கள் விற்பனைக் கடைகள், மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள், ஹார்டுவேர் கடைகள், வாகன உதிரிப் பாகங்கள் விற்பனைக் கடைகள், புத்தகங்கள் எழுதுபொருட்கள் விற்பனைக் கடைகள், வாகனப் பழுது பார்ப்பகங்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
வாடகை வாகனங்கள், டாக்சி, ஆட்டோக்களில் பயணிகள் இ பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும். டாக்சிகளில் ஓட்டுநர் தவிர மூவரும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இருவரும் பயணிக்க அனுமதிக்கப்படும்.