மதுரையில் புதிதாக அமையவுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் சார்பாக தற்காலிகமாக வெளிப்புற நோயாளிகள் துறையை உருவாக்க முடியுமா? என மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், உத்திர பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், தெலுங்கானா மாநிலங்களில் புதிய எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு வெளிப்புற நோயாளிகள் துறை தொடங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேபோல் ஜார்கண்ட், அசாம், குஜராத் மற்றும் ஜம்மு ஆகிய மாநிலங்களில் எம்.பி.பி.எஸ் சேர்க்கையும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே மதுரையிலும் தற்காலிக வெளிப்புற நோயாளிகள் துறையை உருவாக்க உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு மனுதாரர் கோரியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.