நீலகிரி மாவட்டம் பந்தலூரில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் ஆம்புலன்சில் ஏற மறுத்து சுகாதாரத்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீது கொரோனாவை பரப்பியதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கயிறு கட்டி கொரோனாவுக்கு தடுப்பு போடும் அந்தப்பகுதி மக்களின் அறியாமை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள உப்பட்டி, மேஸ்திரிகுன்னு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் சம்பவத்தன்று நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சை மையத்திற்கு கொண்டுசெல்ல சுகாதாரத் துறை பணியாளர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்றுள்ளனர். தங்கள் பகுதிக்குள் அன்னியர்களால் கொரோனா பரவிவிடாமல் இருக்க அங்குள்ளவர்கள் கயிறு கட்டி வைத்திருந்தனர்.
அப்போது வீட்டிலிருந்தவர்களிடம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் பெயரை கூறி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்சில் வந்து ஏறிக்கொள்ள அறிவுறுத்தினர். ஆனால் ஆம்புலன்சில் ஏற மறுத்த அவர்கள் , வாய்யா, போய்யா என ஏக வசனத்தில் பேசி சுகாதார மற்றும் நகராட்சி பணியாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் பணியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து ஆம்புலன்ஸில் வர மறுப்பு தெரிவிது அதிகாரிகளை விரட்ட தொடங்கினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கொரோனா பாதிப்புகுள்ளானவர்களுடன் , வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கொலை மிரட்டல் விடுத்த நோயாளிகளையும் சமாதானப்படுத்தி ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் நான்கு பேரின் மீதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வெளியேறியது மற்றும் நோய் பரப்பும் வகையில் சுற்றித் திரிந்தது உள்ளிட்ட பிரிவுகளில் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே அவர்கள் மீது கொலை மிரட்டல் விடுத்ததாக, நகராட்சி மூலம் காவல் நிலையத்தில் புதிய புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பெருந்தொற்று காலத்திலும், காதாரத்துறை அதிகாரிகள் நமக்காக சேவை செய்கின்றனர் என்பதை உணர்ந்து கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.