கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிதியின் 2-ம் தவணையாக 2ஆயிரம் ரூபாய், 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கொரோனா நிவாரண நிதியாக 2 கோடியே 9 லட்சத்து 81 ஆயிரத்து 900 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 4ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, கொரோனா நிதியின் முதல் தவணை 2ஆயிரம் ரூபாய் கடந்த மாதம் 15-ந்தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 4196 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, கொரோனா நிவாரண நிதியின் 2-வது தவணை 2ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை கலைஞர் பிறந்தநாளை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 2-வது தவணை கொரோனா நிதிக்காக மேலும் 4196 கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளது.
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாயவிலைக் கடை மூலம் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கோதுமை மாவு, சர்க்கரை, உப்பு, ரவை, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட 14 வகையான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படவுள்ளது. இதற்காக 844 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல ஏற்கனவே அறிவித்தபடி 14ஆயிரம் கோயில் பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவியாக தலா 4ஆயிரம் ரூபாய் நிவாரணமும், 10 கிலோ அரிசி மற்றும் 15 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணமும், மருத்துவர்கள், மருத்துவ பணியளர்கள், காவலர்கள், நீதிபதிகள் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் நிதியுதவியும் வழங்கும் திட்டத்தையும் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.