கிருஷ்ணகிரியில் மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு, மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடிய சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி தாசரிப்பள்ளியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் கிருஷ்னகிரி டேம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ் பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது மனைவி ராஜலட்சுமி மற்றும் குழந்தைகளுடன் ராயக்கோட்டை சாலையில் போலீஸ் குடியிருபபில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 23 ந் தேதி மனைவி ராஜலட்சுமி வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் போது மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறி கதறியுள்ளார்.
மனையியை அடக்கம் செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை வேக வேகமாக செய்த ரமேஷின் நடவடிக்கைகளில் உறவினர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது.
சடலத்தின் நெற்றில் காசு வைப்பதற்கு பதிலாக கண்களில் இரு ஒத்த ரூபாய் நாணயங்களை வைத்திருந்தது கூடுதல் குழப்பத்தை உண்டாக்கியது.
கழுத்தில் மாலை அணிந்து பிரீசர் பாக்சில் வைக்கப்பட்டிருந்த ராஜலெட்சுமியின் சடலத்தை குளிப்பாட்ட வெளியில் எடுத்த போது கழுத்தில் கயிற்றால் இறுக்கிய ரத்தகாயம் இருந்தது.
இதையடுத்து அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ராஜலட்சுமியின் கழுத்து பகுதியில் காயம் இருந்ததை உறுதி செய்தனர்.
இதையடுத்து போலீசார் ராஜலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் ரமேசிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் குடும்ப தகராறில், மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்ததும், பின்னர் கொலையை மறைக்க மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறி நாடகமாடியதும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து ரமேசை கைது செய்த போலீசார், முதலில் சிஆர்பிசி 174 என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், தற்போது இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.