குடிபோதையில் கார் ஓட்டி வந்து இரு சக்கர வாகனத்தில் மோதியவர், போலீஸ் முன்னிலையில் காஞ்சனா படத்தில் வரும் ராகவா லாரன்ஸ் போல சாலையில் ஓங்கி மிதித்து சடுகுடு ஆடிய சம்பவம் சத்தியமங்கலத்தில் அரங்கேறி உள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சை புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜியாவுல்லா. இவர் மாதம்பாளையம் சாலையில் தனது மொபட்டில், மனைவி ஹாஜிரா உடன் சென்று கொண்டிருந்தபோது பின்னால் சென்ற கார் ஒன்று மொபட்டின் மீது மோதியதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். மனைவி ஹாஜிராவுக்கு இரண்டு கால்களிலும் காயம் ஏற்பட்டது.
இதை கண்ட அப்பகுதி மக்கள் இரு சக்கர வாகனத்தின் மீது மோதிய காரை தடுத்து நிறுத்தினர். அப்போது காருக்குள் இருந்து இறங்கிய ஓட்டுனர் மதுபோதை தலைக்கேறிய நிலையில் சாலையில் நின்று கொண்டு உரக்க கத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் அந்த போதை ஓட்டுனர், காஞ்சனா படத்தில் ராகவா லாரன்ஸ் பல்லை கடித்துக் கொண்டு தரையில் காலால் தட்டி குதிப்பது போன்று குதித்து விபத்தில் சிக்கிய கணவன் மனைவி முன்பு அட்ராசிட்டியில் ஈடுபட்டார் ..!
பின்னர் தனது வண்டியை எடுக்கச் சென்ற ஜியாவுல்லாவை நோக்கி சென்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நின்ற அந்த குடிகார ஓட்டுனரிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று அவர் கலங்கி நின்றார்.
சம்பவ இடத்திற்கு வந்த புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மதுபோதை தலைக்கேறிய நிலையில் அட்டகாசம் செய்த அந்த குடிகார காஞ்சனாவிடம் இருந்து விபத்தில் சிக்கிய கணவன் மனைவியை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து விபத்துக்குள்ளான காரை பறிமுதல் செய்த போலீசார் அந்த போதை ஓட்டுனரை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். கஞ்சனா போல சாலையில் சடுகுடு ஆடிய குடிகார ஓட்டுனர் முத்துசாமி என்பதும் மதுக்கடைகள் அடைக்கப்பட்டதால் சாராயம் குடித்து விட்டு போதையில் விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது. போதை எப்போதும் கேடு தரும்..!