தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு ஜூன் 7 காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று பரவாமல் தடுத்து, மக்களைக் காக்கும் நோக்கத்தில், மே 31 காலையுடன் முடிய இருந்த முழு ஊரடங்கை ஜூன் 7 காலை 6 மணி வரை, மேலும் ஒரு வாரக் காலத்த்துக்கு நீட்டித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்துவரும் நடமாடும் காய்கறி / பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து நடைபெறும் எனக் குறிப்பிட்டுள்ளது.
மளிகைப் பொருட்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன், குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விற்கவும், ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை அனுமதிக்கப்படுகிறது.
13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை அனைத்து அரிசி குடும்ப அட்டைக்காரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம், ஜூன் மாதம் முதல் வழங்கக் கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியே வருவதையும், கூட்டங்கள் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவசிய தேவைகளுக்கு வருவோரும் தேசிய வழிகாட்டுதல் படி, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ள முதலமைச்சர், தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் எனவும், அரசின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.