மியூகோர்மைகோசிஸ் என அழைக்கப்படும் கரும் பூஞ்சைக்கு சுமார் 400 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
கரும் பூஞ்சை நோய் தொடர்பான மருத்துவ நிபுணர் குழுவுடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை - தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார் . இந்த ஆலோசனைக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, கரும்பூஞ்சை நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள், அரசு மருத்துவமனைகளில் தாராளமாக கிடைப்பதாக தெரிவித்தார்.
மூக்கில் இருந்து கருப்பு நிறத்தில் திரவம் அல்லது ரத்தம் வெளியேறினால் கரும் பூஞ்சையின் அறிகுறி என கூறிய அவர், உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
கரும் பூஞ்சையால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பெரிய மருத்துவமனைகளில் 30 படுக்கைகளும், சிறிய மருத்துவமனைகளில் 10 படுக்கைகள் வரையும் ஏற்படுத்த அறிவுறுத்தி உள்ளதாக நாராயணபாபு தெரிவித்தார். முன்னதாக, மருத்துவ நிபுணர்கள் குழு ஆலோசனைக் கூட்டத்தில், மருத்துவத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணனும் கலந்து கொண்டார்.