ஆங்கில மருத்துவத்துடன் கூடிய சித்த மருத்துவம் மூலம் கொரோனா நோயாளிகளை முழுமையாக குணப்படுத்த முடியும் என ஆய்வுகள் முடிவுகள் வந்திருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 200 நோயாளிகளிடம் நடைபெற்ற சித்த மருத்துவன ஆய்வின் முடிவுகளை விளக்குகிறது, இந்த செய்தித் தொகுப்பு.
தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பெரும்பாலும் அலோபதி மருத்துவமும், சில இடங்களில் சித்த மருத்துவ சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் சித்த மருத்துவத்தால் கொரோனாவை குணப்படுத்த முடியுமா? என்று சிலர் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் சித்த மருத்துவம் எடுத்துக்கொண்டால் கொரோனாவில் இருந்து முழுமையாக குணம் பெற முடியுமா ? என்ற ஆராய்ச்சியில் வல்லுனர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சித்த மருத்துவர்கள் சித்ரா மற்றும் மல்லிகா ஆகியோருடன் தற்போதைய மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு மற்றும் சில அலோபதி மருத்துவர்கள் இணைந்து கொரோனா முதல் அலை தீவிரமாக இருந்தபோது ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் Mild, Moderate நோயாளிகள் 200 பேர் தேர்வு செய்யப்பட்டு, இவர்களில் 100 நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவம் மட்டும் வழங்கப்பட்டது. வேறு 100 நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவத்துடன் கூடிய சித்த மருத்துவமும் வழங்கப்பட்டது.
இதன்படி, சித்த மருந்துகளுடன் கூடிய ஆங்கில மருத்துவம் எடுத்துக் கொண்ட நபர்களுக்கு 11 முதல் 14 நாட்களில் RT-PCR மற்றும் Repeat RT-PCR பரிசோதனை செய்ததில் 78.33 சதவீதம் பேருக்கு கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் கிடைத்தது. அதாவது சுமார் 78 சதவீதம் பேர் சித்த மருந்துகளுடன் கூடிய ஆங்கில மருத்துவத்தால் கொரோனாவில் இருந்து குணமாகியிருந்தனர்.
சித்த மருத்துவமும் சேர்த்து எடுத்துக்கொண்ட கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு பிறகு CT Scan பரிசோதனையில் நுரையீரல் தொற்று வேகமாக குறைந்து இருந்ததும் தெரியவந்தது. சித்த மருந்துகள் கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் என்று சிலர் கருதுவதால் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாதிரிகளை தொற்றுக்கு முன்னரும் பின்னரும் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இதில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது தெரியவந்ததாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆங்கில மருத்துவத்துடன் சித்த மருத்துவம் எடுத்துக் கொண்ட 100 பேரில் யாருக்கும் தீவிர நோய் நிலையோ அல்லது உயிர் இழப்போ ஏற்படவில்லை. மேலும் ஆக்சிஜன் அளவு குறையாமல் படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்ததும் ஆய்வில் கண்டறியப்பட்டது என்கின்றனர் சித்த மருத்துவர்கள். இதன் மூலம் ஆங்கில மருத்துவத்துடன் சித்த மருத்துவமும் சேர்ந்து கொடுக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் குணமடைந்தது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆய்வு முடிவினை journal of Ayurveda and Integrative Medicine என்னும் சர்வதேச நாளேட்டில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பிரசுரமாகியுள்ளதையும அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இப்போது கொரோனா 2வது அலை தீவிரமாக உள்ள நிலையில், சிகிச்சை முறையில் சித்த மருத்துவத்தையும் சேர்க்க வேண்டும் என்பது மட்டுமே இந்த ஆராய்ச்சியின் நோக்கம் என்று குறிப்பிடுகின்றன்றனர் சித்த மருத்துவர்கள்.
அத்தோடு கொரோனா நோயாளிகளுக்கு ஆங்கில மருந்துகளோடு கொடுக்கப்பட்ட சித்த மருந்து விவரங்களையும் மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் வசந்த குசுமாகர மாத்திரை, திப்பிலி , ஆடாதோடை மணப்பாகு இவற்றுடன் கபசுரக் குடிநீர் ஆகியவை வயது மற்றும் நோய்த் தொற்றின் அளவுக்கு ஏற்ப வழங்கப்பட்டது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவத்தில் பித்தத்தை அதிகப்படுத்துவதற்கான மருந்துகளை கொடுப்பதனால் உடல் சூடாகி வாய்ப்புண், வயிற்றெரிச்சல் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே முறையான சித்த மருத்துவரை அணுகி மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே சித்த மருந்துகளை கொரோனா நோயாளிகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.