முழு ஊரடங்கை மீறி முக கவசம் அணியாமலும் தேவையில்லாமல் சுற்றி திரிந்து வரும் நபர்களையும் கொரோனா பரிசோதனை செய்ய வேன் மூலம் அழைத்து சென்று அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். தப்பி ஓடியவர்களை விரட்டி விரட்டி பிடித்து ஆம்புலன்சில் ஏற்றியதை விளக்குகிறது இந்த செய்திக்குறிப்பு.
தனித்திரு விழித்திரு வீட்டிலிரு இல்லென்னா வண்டில வந்து ஏற தயாராக இரு..! என்ற கொள்கை முழக்கத்துடன் அருப்புக் கோட்டை வீதியில் வலம் வரும் இந்த ஆம்புலன்சை கண்டால் அடங்கா கால்களை கொண்ட ஊர் சுற்றிகள் பதறி ஓடுகின்றனர்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பிறப்பித்துள முழு ஊரடங்கை மதிக்காமல் வெளியில் சுற்றுவதை வாடிக்கையாக வைத்திருபோரை எந்த ஒரு பாரபட்சமுமின்றி இந்த ஆம்புலன்சில் ஏற்றி கொரோனா பரிசோதனைக்கு அழைத்துச்செல்லும் அதிரடி நடவடிக்கை மேற்க்கொள்ளப்படுகின்றது.
அருப்புக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் ரவிசந்திரன் ரோந்து பணியில் ஈடுபட்ட போது , கொரேனா முழு ஊரடங்கு வீதியை மீறி முகவசமும் அணியாமல் சுற்றி திரிந்த நபர்களை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி கொரோனா பரிசோதனை செய்ய அழைத்து சென்றார். இளைஞர் ஒருவர் தங்களை விட்டும்படி கதறினர்.
முககவசம் அணியாமல் இருசக்கரவாகனத்தில் வந்த ஒருவர் ஆம்புலன்ஸை கண்டதும் தனது இரு சக்கரவாகனத்தை விட்டு இறங்கி பூட்டிக்கிடந்த வீட்டுக்கு வெளியே பதுங்கியபடி, தனது வீட்டிற்கு முன்னால் நிற்பது போல நடித்தார், அவரை அப்படியே வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
பலர் பதறி ஓடிக் கொண்டிருக்க, அங்கு சைக்கிளில் வந்த ஒருவர் தனக்கு மூன்று வேளையும் சாப்பாடு போடுங்க 6 மாசமானாலும் அங்கேயே தங்கி இருக்கிறேன் என்று அசால்டாக அந்த வண்டியில் ஏறி கெத்துக்காட்டினார்.
பதற்றத்துடன் ஆம்புலன்சில் பயணித்த அனைவரையும் எச்சரித்து மீண்டும் அருப்புக் கோட்டை கடை வீதியில் இறக்கி விட்டனர். 6 மாதம் இருக்கிறேன் என்று அடம்பிடித்தவரை மட்டும் படம் பிடித்து விட்டு அனுப்பி வைத்தனர்.
தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா பெருந்தொற்று ஏற்படாதவரை நோயின் தீவிரத்தை இங்கே பலர் உணர்வதில்லை. சுயக்கட்டுப்பாடின்றி ஊர் சுற்றுவோருக்கு நோயின் தீவிரத்தை உணர்த்த அவ்வப்போது இது போன்ற ஷாக் ட்ரீட்மெண்டுகளும் அவசியமாகின்றது.