கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவருவதாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் அமைந்துள்ள Daimler தொழிற்சாலையில், ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் அமைந்துள்ள ஐநாக்ஸ் ஆக்சிஜன் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஆய்வு செய்த முதலமைச்சர், உற்பத்தி மற்றும் விநியோகம் குறித்து கேட்டறிந்தார்.
இதனையடுத்து, திருவள்ளூர் மாவட்டம் நேமம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராமப்புற மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர்,தளர்வுகளற்ற முழு ஊரடங்கிற்கு பலனாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைகிறது என்றார். அடுத்த இரண்டு மூன்று நாட்களில் முழு ஊரடங்கின் பலன் மேலும் தெரிய வரும் என்றார். தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் கூறினார்.
தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்கப்பட்டுள்ளது எனவும், கொரோனா சிகிச்சைக்கு தேவையான படுக்கைகளும் அதிகரிக்கப்பட்டு தற்போது போதுமான அளவில் இருக்கிறது எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நாள் ஒன்றுக்கு தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை 78ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறிய முதலமைச்சர், தடுப்பு மருந்துகள் வீணாவதும் குறைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசை மட்டும் சார்ந்திருக்காமல் உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய முதலமைச்சர், பிரச்சனைகளை சரி செய்து செங்கல்பட்டிலுள்ள மத்திய அரசின் ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி மையத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.