மாணவியின் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான, பத்ம ஷேசாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபலனிடம், விடிய விடிய விசாரணை நடத்திய போலீசார், போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ததுடன் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 30 மாணவிகள் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கே.கே.நகரில் இயங்கி வரும் பத்மா ஷேசாத்ரி பால பவன் மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணிபுரிந்த ராஜகோபாலனின் பாலியல் அத்துமீறல்களை, அங்கு பயிலும் மாணவி ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிடவே, இந்த விவகாராம் விஸ்வரூபம் எடுத்தது.
இதனையடுத்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல் துணை ஆணையர் ஜெயலஷ்மி பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர், ராஜகோபாலன் மற்றும் அவனது தாய், மனைவி ஆகிய மூவரையும் தனிப்படை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
ராஜகோபாலன் பயன்படுத்திய செல்போன், லேப்-டாப் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், சைபர் கிரைம் நிபுணர்கள் உதவியுடன் அழிக்கப்பட்ட message, call history ஆகிய ஆதாரங்களை மீட்டெடுத்தனர். அத்தோடு, பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவி அளித்த புகாரில் ராஜகோபாலனை போலீசார் கைது செய்தனர்.
அவன் மீது போக்சோ சட்டம், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது, பெண்களை அவமதித்தல், மானபங்கம் படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ராஜகோபாலன் எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்ரேட் முகமது பரூக் முன் ஆஜர்படுத்தப்பட்டான். அவனை வருகிற 8-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்குமாறு மாஜிஸ்ரேட் உத்தரவிட்டத்தை அடுத்து, ராஜகோபாலன் சிறையில் அடைக்கப்பட்டான்.
ராஜகோபாலனிடம் விடிய விடிய நடத்தப்பட்ட விசாரணையில், தவறை ஒப்புக் கொள்ளும் வகையிலேயே பேசியதாக கூறப்படுகிறது. அத்தோடு மட்டுமில்லாமல் இந்த விவகாரத்தில் பத்ம ஷேசாத்ரி பள்ளியில் பணிபுரியும் மேலும் சில ஆசிரியர்களுக்கு தொடர்பு இருப்பதாக ராஜகோபாலன் வாக்குமூலம் அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளாக ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படும் நிலையில், மாணவிகள் புகாரளித்தும் ஆசிரியர் மீது பி.எஸ்.பி.பி. பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தவறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரிக்க பி.எஸ்.பி.பி. பள்ளி முதல்வர் கீதா கோவிந்தராஜன், தாளாளர் ஷீலா ராஜேந்திரன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, அசோக் நகர் மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரான இருவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இதனிடையே, கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் பாலியல் புகாரளித்துள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையரின் செல்போன் எண்ணில் தொடர்புகொண்டு முன்னாள் மாணவிகள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் புகாரளித்துள்ளனர். ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக ரகசிய விசாரணை நடத்தி, புகார் உறுதியாகும் பட்சத்தில் தனித் தனி வழக்காக பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.