கொரோனா சூழலில் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்துவதா, வேண்டாமா என்பது குறித்து மத்தியக் கல்வி அமைச்சகம் நடத்திய காணொலிக் கலந்துரையாடலில் மாநிலக் கல்வி அமைச்சர்கள், செயலாளர்கள் பங்கேற்றுக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அனைத்து மாநிலக் கல்வி அமைச்சர்களும், செயலாளர்களும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். தமிழகத்தின் சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் கல்வித் துறைச் செயலாளர்கள் கலந்துகொண்டு கருத்துக்களை எடுத்துரைத்தனர். புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.