தமிழகம் முழுவதும் நாளை முதல் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால், சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்களின் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
தமிழகத்தில் நாளைமுதல் பொதுமுடக்கம் தீவிரமாக அமலாவதால், பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக நேற்று மாலை முதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு 1500 பேருந்துகளும், கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை மற்றும் முக்கிய நகரங்களுக்கு இடையே 3000 பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கைக்குத் தக்கபடி தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, சென்னையில் இருந்து நேற்று ஏராளமானோர் தங்களின் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர். இன்று காலை முதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்குக் கடைசியாகப் புறப்படும் பேருந்துகளின் நேரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காலையில் இருந்தே ஏராளமானோர் சென்றவண்ணம் உள்ளனர்.