தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க நாளை முதல் ஒருவாரக் காலத்துக்குத் தளர்வில்லா முழு ஊரடங்கு நடைமுறைப்படுகிறது.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து, நாளை முதல் ஒரு வாரக் காலத்துக்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன்படி, முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்துக் கடைகள், கால்நடை மருந்தகங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்படும். பால், குடிநீர், நாளேடுகள் ஆகியவற்றை வழங்க அனுமதிக்கப்படும். காய்கறிகள், பழங்கள் தோட்டக்கலைத் துறை மூலம் சென்னையிலும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும்.
தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணிபுரிவோர் வீட்டிலிருந்தே பணிபுரியக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. வங்கிகள் 3ல் ஒரு பங்கு ஊழியர்களுடன் இயங்கும். மின் வணிகச் சேவை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம். உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல்கள் வழங்க மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
ஜொமேட்டோ, ஸ்விக்கி போன்ற மின்வணிக நிறுவனங்கள் மூலம் உணவுகளை டெலிவரி செய்யவும் அதே நேரங்களில் மட்டும் அனுமதிக்கப்படும். பெட்ரோல், டீசல் பங்குகள் வழக்கம் போல் இயங்கும். ஏ.டி.எம். சேவைகள் அனுமதிக்கப்படும். வேளாண் விளை பொருட்கள் மற்றும் இடுபொருட்களைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும். சரக்கு வாகனங்கள் செல்லவும், இன்றியமையாப் பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படும்.
உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்பு நிகழ்வுகளுக்கு மட்டும் மாவட்டம் விட்டு மாவட்ட செல்ல இ-பதிவுடன் அனுமதிக்கப்படும். மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்துக்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை. செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கலாம். தடையின்றித் தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள், இன்றியமையாப் பொருட்கள், மருத்துவக் கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்படும்.