திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மூச்சுத்திணறலோடு ஆட்டோவில் அழைத்துவரப்பட்ட நோயாளி, அரை மணி நேரத்திற்கு மேலாக உதவிக்கு யாரும் இல்லாமல் தவியாய் தவித்த நிகழ்வு காண்போரை கலங்க வைக்கிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இன்று காலை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொரோனா நோயாளி ஒருவர் ஆட்டோவில் அழைத்துவரப்பட்டார். லேசான மூச்சுத்திணறலோடு அழைத்துவரப்பட்ட அவரை, ஆட்டோவில் அமரவைத்துவிட்டு, மனைவியும், மகளும் உள்ளே மருத்துவரை அழைக்கச் சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாததால் அவரை உடனடியாக அனுமதிக்க இயலாத சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே, அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாகி ஆட்டோவிலேயே அங்கும், இங்கும் அவர் பரிதவித்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியது.
பதற்றமடைந்த மனைவி அழுதுகொண்டே நெஞ்சை தடவி விட்டு அவரை ஆசுவாசப்படுத்தினார். அரை மணி நேரத்திற்கு மேலாக உதவிக்கு யாரும் வராத நிலையில், ஆட்டோவில் இருந்து இறக்கி மருத்துவமனை வளாகத்தில் அவரை அமர வைத்தனர். அப்போதும் உதவிக்கு யாரும் முன்வராத நிலையில், மூச்சுத்திணறலால் நோயாளி பெரும் அவதியடைந்தனர்.
இதனையடுத்து, நீண்ட போராட்டத்திற்கு பின்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாததால் நோயாளிகளை வெளியிலேயே அமர வைத்து சிகிச்சை அளிப்பதாகவும், ஒரு நோயாளிக்கு அரை மணி நேரம் என சுழற்சி முறையில் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.