கொரோனா நிவாரண நிதியின் இரண்டாம் தவணையான 2ஆயிரம் ரூபாயை கலைஞர் பிறந்தநாளுக்கு முன்னரே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து மதுரை தோப்பூர் நெஞ்சக நோய் மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுள்ள 500 படுக்கைகளுடன் அமைக்கப்பட்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
மதுரையில் இருந்து புறப்பட்டு திருச்சி வந்த மு.க.ஸ்டாலின், அரசு மருத்துவமனையில் 300 ஆக்சிஜன் படுக்கைகள் உட்பட 400 படுக்கைகளுடன் அமைக்கப்பட்ட சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். தனியார் திருமண மண்டபத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியையும் அவர் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து துவாக்குடி என்.ஐ.டி.கல்லூரி விடுதியில் 360 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டிருந்த சிகிச்சை மையத்தையும் திறந்து வைத்து பார்வையிட்டார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பட்டியலிட்டு, தமிகத்தில் கொரோனா இல்லாத நாள் தான் தங்களுக்கு மகிழ்ச்சியான நாள் என்றார்.
கொரோனா நிவாரண நிதியின் 2-ம் தவணையான 2ஆயிரம் ரூபாயை கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதிக்கு முன்னரே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படுமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறையுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என்ற முதலமைச்சர், வீட்டில் இருந்து பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கான ஊதியம் பாதியாக குறைக்கப்படும் என வெளியாகும் தகவல் உண்மையில்லை எனவும் விளக்கமளித்தார்.