மதுரையில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தோப்பூரில் ஆக்சிஜன் வசதியுள்ள 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தையும் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம், பரவலைக் கட்டுப்படுத்தவும், நோயாளிகளின் சிகிச்சைக்கும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அதிகாரிகள் விளக்கினர்.
மதுரை தோப்பூர் நெஞ்சக நோய் மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுள்ள 500 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
முன்னதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களைச் சேர்ந்த 15 பேருக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு பணிக்கான நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழியும் கலந்துகொண்டார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர், படுகாயமடைந்தவர்கள், காயமடைந்தோரின் குடும்பத்தினர் என 19 பேருக்கு 2018ஆம் ஆண்டு கிராம உதவியாளராகப் பணி நியமனம் வழங்கப்பட்டது. இந்நிலையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் கல்வித் தகுதிக்கேற்ற பணி வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்ததால் இளநிலை உதவியாளராகப் பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.