ஆரணியில் கொரோனா நோயாளிகளுக்கு அனுமதியின்றி மரத்தடியில் டெண்ட் அமைத்து சிகிச்சை அளித்து வந்த தனியார் மருத்துவமனைக்கு பூட்டுப்போட்டு சீல் வைக்கப்பட்டது. திறந்தவெளியில் ஒரே படுக்கையில் 2 நோயாளிகளை படுக்க வைத்து சிகிச்சை என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலித்ததும் அம்பலமாகியுள்ளது. மேலும் அதிகாரிகளின் ஆய்வின் போதே நோயாளி ஒருவர் துடிதுடித்து உயிரிழந்த காட்சி அதிர வைப்பதாக இருந்தது.
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நுரையீரல் சிகிச்சை நிபுணராக பணிபுரியும் சிவரஞ்சனி, ஆரணி பேருந்து நிலையம் எதிரே குழல் என்ற தனியார் கிளினிக்கை நடத்தி வருகிறார். அங்கு, அனுமதியின்றி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதை பயன்படுத்தி, தனியாக பொதுவெளியில் கூடாரம் அமைத்து அனுமதியின்றி கொரோனா நோயாளிகளுக்கு சிவரஞ்சனி சிகிச்சை அளித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக, பேருந்து நிலையத்திற்கு பின்புறம் வாடகைக்கு வாகன நிறுத்தும் இடத்தை ஆக்கிரமித்து டெண்ட் அமைத்து, படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளை கவனித்துக் கொள்ள ஆள் இல்லாமல் திணறி வரும் வேலையில், சிவரஞ்சனி அரசு பணிக்கு விடுப்பு எடுத்துவிட்டு, தனது கிளினிக்கை டெவலப் செய்து வந்துள்ளார். ஒரே படுக்கையில் இரண்டு நோயாளிகளை படுக்க வைத்திருந்ததோடு, ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் இரண்டு, மூன்று பேருக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்ட அவலமும் அரங்கேறியது.
தரமான சிகிச்சை அளிக்காமல் அதிக கட்டணம் வசூலித்ததாகவும் சிவரஞ்சனி மீது புகார் எழுந்துள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தனி அறையில் தனிமைபடுத்திக் கொண்டு இருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அரசு மருத்துவரான சிவரஞ்சனி பேராசையால் எதையுமே பொருட்படுத்தாமல் பொதுவெளியில் நோயாளிகளை படுக்க வைத்து சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
பொதுவெளியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது, மற்றவர்களுக்கும் தொற்று பரவ வாய்ப்பாக அமையும் என்பதால், அங்கு சிகிச்சை பெற்று வந்த 11 கொரோனா நோயாளிகளை செய்யாறு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
அப்போது, அங்கு ஒருவாரமாக சிகிச்சை பெற்று வந்த ராமகிருஷ்ணபேட்டையைச் சேர்ந்த மனோகரன் என்பவர் திடீரென உடல்நிலை மோசமடைந்து துடிதுடித்து உயிரிழந்தார். அங்கிருந்தவர்கள் அவரது உயிரைக் காப்பாற்ற போராடியக் காட்சிகள் காண்போரை கலங்க வைத்தது.
பின்னர், அனுமதியின்றி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாக குழல் மருத்துவமனையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.